இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து லாகூர் விமான நிலையத்திலும் வீதிகளிலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் அச்சமடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை உறுதிப் படுத்தியுள்ள பொலிஸார் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















