ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனாலும், இந்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் மறுத்துள்ளார்.
கொலையுண்ட ஏமன் பிரஜையான தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை ஜெரோம் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அப்துல் குற்றம் சாட்டியுள்ளார்.
நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவராக சாமுவேல் ஜெரோம் உள்ளார்.
இந்நிலையில், ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞராக தவறாக சித்தரித்துக்கொண்டு, ஏமனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் அறிவுறுத்தல் இல்லாமல், கூட்டு நிதியுதவி மூலம் திரட்டப்பட்ட 40,000 டொலர் பணத்தை நன்கொடையை சேகரித்ததாகவும் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம், பல வருடங்களாக ஏமனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏமனில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெரோம், நிமிஷா பிரியாவின் வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.
ஏமனில், நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவராக (Power of attorney) சாமுவேல் ஜெரோம் செயற்படுகிறார்.
ஏமனில் ஷரியா சட்டத்தின்படி, மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நிமிஷாவின் குடும்பத்தினர் சாமுவேலுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில், நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அப்துல் ஃபத்தா மஹ்தி முன்வைத்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் மறுத்துள்ளார்.
அதன்படி, தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை எனவும் யாரோ சிலர் கூறிய தகவல் அடிப்படையில் மஹ்தியின் சகோதரர் அவ்வாறு கூறியுள்ளார் எனவும் பின்னர் தான் அதுகுறித்து உரிய விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிமிஷா பிரியாவின் வழக்குச் செலவுக்காக இந்தியாவில் திரட்டப்படும் பணம் முழுவதும் இந்திய தூதரகம் வழியாகவே ஏமனில் அவருக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு அனுப்பப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏமனில் தன்னை துன்புறுத்திய தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 16 ஆம் திகதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்ட நிலையில், தண்டனை ஒத்திவைக்கப்பட்டு அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே, கேரள தாதியரை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக இந்திய மத்திய அரசு கடந்த (14) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















