நேற்று இரவு (27) நடைபெற்ற டி20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இலங்கையின் வெற்றி சிம்பாப்வேயை போட்டிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, கமில் மிஷார (76) மற்றும் குசல் மெண்டிஸ் (40) ஆகியோரின் விரைவான ஆட்டத்தால் 184 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியானது, துஷ்மந்த சமீரவின் ஆபத்தான பந்து வீச்சுத் தாக்குதலினால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் இரண்டு விக்கெட்டுகளை துஷ்மந்த சமீர ஓரே ஓவரில் தகர்த்தினார்.
சாஹிப்சாதா ஃபர்ஹானை 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார், அதே ஓவரில், பாபர் அசானை எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்க வைத்தார்.
டி20 போட்டிகளில் அதிக முறை டக்-அவுட் ஆன பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் தற்போது பெற்றுள்ளார்.
இது டி20 போட்டிகளில் அவர் 10 ஆவது முறையாக டக்-அவுட் ஆனதாகும்.
சாம் அயூப் மற்றும் உமர் அக்மல் ஆகியோரும் தலா 10 டக்-அவுட்களுடன் உள்ளனர்.
அதன் பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.
பந்து வீச்சில் சமீர 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை தகர்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் தெரிவானார்.















