பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது.
இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது.
இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் அம்பாந்தோட்டை , மியான்மரின் கியாக்பியூ, பங்களாதேஷின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது.
இந்தியாவை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, ‘ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்’ (String of Pearls) எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர்.
இதற்கு பதிலடியாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘குவாட்’ (‘Quad) அமைப்பை இந்தியா துவக்கி உள்ளது.
சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு பங்களாதேஷ் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை துவங்கியுள்ளது.













