ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால், அங்குள்ள எவின் (Evin) சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியைச் சேர்ந்த 53 வயதான லின்ட்சே மற்றும் கிரேக் ஃபோர்மேன் (Lindsay and Craig Foreman – ) தம்பதியினர், கடந்த 2025 ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிளில் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஈரானில் கைது செய்யப்பட்டனர்.
உளவு பார்த்ததாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களால் அந்தப் பகுதியே அச்சத்தில் உள்ளது.
சிறைக்கு மிக அருகில் குண்டுகள் விழுந்ததால், தம்பதியினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்களது உறவினர்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தனது பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அது தமக்கு பெரும் நிம்மதியை அளித்தது. எனவும் அவர்கள் இதுவரை காயமடையவில்லை என்றாலும், மிகுந்த அச்சத்தில் உள்ளனர் எனவும் அவர்களது மகன் ஜோ பென்னட் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













