மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை நிர்வகிப்பதற்கான ‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டமொன்று நேற்று (06) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பேணுதல், குறிப்பாக எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் குறித்தும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
உணவு உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைக்குத் தேவையான எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் தடையின்றி வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும், நாட்டின் உணவு உற்பத்திக்குத் தேவையான உரம் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது, குறித்த நாடுகள் ஏதேனும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தால் அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.













