வளைகுடா நாடுகளிலும் போரின் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
UAE , சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், தாயகம் திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியர்கள் சுமார் 1,000 பேர் கத்தாரிலிருந்து டில்லி, மும்பை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்குத் திரும்பியுள்ளதாக கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், சல்வா எல்லை வழியாக சவுதி அரேபியாவிற்குச் செல்லும் இந்தியர்களுக்கு 96 மணிநேரச் செல்லுபடியாகும் தற்காலிகப் போக்குவரத்து விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தூதரகத்தின் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை அளித்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் விமானம் இன்றும் இந்தியர்களை அழைத்துக் கொண்டு டில்லிக்கு வரவுள்ளது.
இதனிடையே, தனியார் அமைப்புகள் மூலம் பஹ்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும், இந்தியத் தூதரகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பஹ்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது













