ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (18) கட்டார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார்.
கட்டார் செய்திச் சேவையின் தகவலின்படி,
தொலைபேசி உரையாடலின் தொடக்கத்தில், கட்டார் மற்றும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகத் தொடரும் ஈரான் ஆக்கிரமிப்பின் பின்னணியில், கட்டாரின் நிலைமை குறித்து விசாரித்த ஜனாதிபதி அநுரகுமார, தனது நாட்டின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
கட்டாரின் நிலைமைகள் குறித்தும், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரின் நல்வாழ்வு குறித்தும் இலங்கை ஜனாதிபதிக்கு அமீர் இதன்போது உறுதியளித்ததோடு, கட்டார் மண்ணில் வாழும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினார்.
அதிகரித்து வரும் இராணுவப் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் மீதான அவற்றின் சாத்தியமான தாக்கம் உள்ளிட்ட பரந்த பிராந்திய சவால்கள் குறித்தும் இரு தலைவர்களும் இந்த உரையாடலில் விவாதித்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமார இதன்போது எடுத்துரைத்தார்.
கட்டார் அமீர், தற்போதைய சவால்கள் இருந்தபோதிலும் நிலையான விநியோகத்தைப் பேணுவதில் தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தி, நம்பகமான எரிசக்தி பங்காளியாக டோஹாவின் பங்கை எடுத்துரைத்தார்.
பதட்டங்களைத் தணித்து ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, நெருக்கடியைத் தீர்க்க இராஜதந்திரத் தீர்வுகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.












