இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிராகரித்துள்ளது.
அத்துடன், தவறான தகவல்களை வெளியிட்ட அந்த அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,
தங்கள் நிறுவனம் சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலையத்திற்காக மட்டுமே மசகு எண்ணெயை இறக்குமதி செய்கின்றோம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்ட ஸ்திரமின்மையைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் முதல் மசகு எண்ணெய் சரக்கு ஏப்ரல் 17 ஆம் திகதி (இன்று) நாட்டை வந்தடையும்.
தாங்கள் கொள்முதல் செய்த அல்லது ஒப்பந்தம் செய்துள்ள எந்தவொரு மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கும் ஒரு பீப்பாய்க்கு 286 டொலர் தொகையைச் செலுத்தவும் இல்லை, செலுத்த ஒப்புக்கொள்ளவும் இல்லை.
மத்திய கிழக்கில் மோதல் வெடித்த பின்னர் வரும் எண்ணெய் சரக்குகள் ஒரு பீப்பாய்க்கு சுமார் $71.99, $111.62, $71.81 மற்றும் $113.29 என்ற விலைகளில் பெறப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் உலகளாவிய சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த விலைகள் சாதகமானவை.
ஏனைய சந்தைப் பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் சாதகமான நிலையை அடைந்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்ட போலியான அறிக்கைகள் பரப்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம்.
அத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடையே அமைதியின்மை, பதட்டம் மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் – என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள.
காப்பீடு, கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் போன்ற மேலதிக செலவுகள் காரணமாக, ஆசிய கொள்வனவாளர்களுக்கு எண்ணெய் விலைகள் பிரென்ட் மசகு எண்ணெய் அளவுகோல்களை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜஸ் எல்ஹெடெரி கூறினார்.
மேலும், மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெயை சுமார் 286 டொலர் விலையில் வாங்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டதன் பின்னணியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.













