மேற்கு வங்கத்தில் இன்று ( 27) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு கடந்த 23 ஆம் திகதி நடந்து முடிந்தது.
இதில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகின.
சில வாக்குச்சாவடிகளில் குழப்பங்கள், தகராறுகள் ஏற்பட்ட நிலையிலும், எங்கும் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
அதற்கான, தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று கொல்கத்தாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார்.
இன்று மாலை 6 மணியுடன் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் ஓயும் நிலையில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெறுகிறது.
வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். மே 4 ஆம் திகதி அனைத்து தொகுதிகளிகும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












