திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் கட்டுமானங்கள் தொடர்பான சட்டச் சிக்கல் சுமுகமாக நிறைவடைந்ததையடுத்து, அது தொடர்பான மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிறைவு செய்தது.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று முடிவுக்குக் கொண்டுவந்தது.
குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலையின் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தரவுக்கு எதிராக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது அரச சட்டத்தரணி பின்வரும் முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளை மீறி அமைக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களை மனுதாரரான தேரர் தற்போது அகற்றியுள்ளார்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விகாராதிபதிக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் திணைக்களம் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, எதிர்மனுதாரர் தரப்பான அரச தரப்பின் இந்த அறிவிப்பு திருப்தியளிப்பதாகத் தெரிவித்தார்.
இரு தரப்பு இணக்கப்பாட்டினைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான விசாரணையை முழுமையாக நிறைவு செய்வதற்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த விகாரைக் கட்டுமானங்கள் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.













