கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பான எல்லை நிர்ணய விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இன்று (07) வழங்கியுள்ள தீர்ப்பு, அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
கல்முனை மாநகர சபைத் தேர்தல் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ,
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான எல்லை மீள் நிர்ணயப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இணைந்து இதற்கான அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி மூலம் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.
கல்முனைப் பகுதியில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது குறித்து வாதாடிய போதிலும், அது தொடர்பான இறுதி முடிவை மாகாண சபைகள் அமைச்சும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலையில் கல்முனை மாநகர சபைக்கோ அல்லது சாய்ந்தமருது நகர சபைக்கோ தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில், இவ்விரு சபைகளுக்குமான எல்லைகள் இன்னும் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை.
நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இரண்டு மாத கால அவகாசத்திற்குள் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடைந்து, வர்த்தமானி வெளியான பின்னரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பானது சாய்ந்தமருது மக்களுக்குக் கிடைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாகத் தனி நகர சபைக்காகப் போராடி வரும் மக்களுக்கு, இந்த உத்தரவு ஒரு தெளிவான காலக்கெடுவையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.















