தெற்கு இங்கிலாந்தில் வாகனச் சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் முதலாவது ‘லாஃபிங் காஸ்’ (Laughing Gas) பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹாம்ப்ஷயர், ஐல் ஆஃப் வைட் (Hampshire, Isle of Wight) மற்றும் தேம்ஸ் வேலி ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து, வாகனச் சாரதிகள் ‘நைட்ரஸ் ஆக்சைடு’ (Nitrous Oxide) எனப்படும் ‘சிரிப்பூட்டும் வாயு’ போதையில் இருப்பதை உடனடியாகக் கண்டறியும் புதிய கருவியைப் பரிசோதிக்கவுள்ளன.
‘NOS’ அல்லது ‘ஹிப்பி கிராக்’ என அழைக்கப்படும் இந்த வாயுவைச் சுவாசிப்பதால் உடலில் உற்சாகம் ஏற்படுவதுடன், கட்டுப்படுத்த முடியாத சிரிப்பும் உண்டாகும்.
அதேவேளை, இது கடும் தலைவலி, மயக்கம் மற்றும் மனப்பயத்தை (Paranoia) ஏற்படுத்தக்கூடியது.
தற்போது வரை சாரதிகள் இந்தப் போதையில் இருப்பதை நிரூபிக்க முறையான கருவிகள் இல்லாததால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் பொலிஸாருக்குச் சிக்கல் நீடித்து வந்தது.
ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளைத் தொடர்ந்து ‘Respira Technologies’ நிறுவனத்தால் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் இந்தக் கருவிக்குள் ஊதினால், சில நிமிடங்களிலேயே முடிவு தெரிந்துவிடும்.
ஒருவர் இந்த வாயுவைச் சுவாசித்த இரண்டு மணிநேரம் வரை இதன் மூலம் கண்டறிய முடியும்.
பிரித்தானியாவில் 2023-ஆம் ஆண்டு முதல் இந்த வாயுவைச் சட்டவிரோதப் பயன்பாட்டிற்காக வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது.
இதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.















