உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 19-வது ஐ.பி.எல். (IPL 2026) இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மகுடம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று (31) குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்காகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 28-ஆம் திகதி ஆரம்பமான இந்த 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 முன்னணி அணிகள் பங்கேற்றன.
விறுவிறுப்பான லீக் சுற்றுப் போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்த ‘பிளே-ஓப்’ (Play-offs) சுற்று முடிவுகளின் அடிப்படையில், ஏனைய 8 அணிகளையும் பின்னுக்குத் தள்ளி பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இறுதிப்போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இன்றிரவு 7.30 மணிக்கு இந்த இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளுமே ஏற்கனவே ஐ.பி.எல். கோப்பையைக் கைப்பற்றிய அனுபவம் வாய்ந்த அணிகளாகும்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கிண்ணத்தை வென்று நடப்பு சாம்பியனாகத் திகழும் பெங்களூரு அணி, தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களம் இறங்குகிறது.
மறுபுறம், கடந்த 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகி, தனது முதல் வருடத்திலேயே கிண்ணத்தைக் கைப்பற்றி அசத்திய குஜராத் அணி, சொந்த மண்ணில் இரண்டாவது முறையாகக் கிண்ணத்தை ஏந்தக் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றிரவு நடைபெறவுள்ள இந்த இறுதிப் போட்டியில், பெங்களூரு அணி தனது பட்டத்தைத் தக்கவைக்குமா அல்லது குஜராத் அணி மீண்டும் சாம்பியன் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.
















