குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட மேலும் இரண்டு மணல் கலைக் கருவிகள் பரிசோதனையில் ஆபத்தான அஸ்பெஸ்டாஸ் பொருள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனைகளில் ‘மொன்டிசோரி சாண்ட் ஆர்ட் ட்ரே’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட ஒரு தயாரிப்பில் அஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தயாரிப்பு அமேசான் மார்க்கெட்ப்ளேஸ் மற்றும் டிக்-டாக் ஷாப் ஆகிய இணைய தளங்களில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் டிக்-டாக் ஷாப்பில் வாங்கப்பட்ட மற்றொரு மணல் கலைத் தட்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் அதிலும் ஆபத்தான பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே தயாரிப்பு அமேசான் மார்க்கெட்ப்ளேஸில் மூன்று தனிப்பட்ட விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அஸ்டா கடையில் வாங்கப்பட்ட ‘“GL Style Sand Bottle Art Heart or Stars”என்ற கலைத் தொகுப்பிலும் ‘டிரெமோலைட்’ வகை அஸ்பெஸ்டாஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு RMS International Limited என்ற நிறுவனத்தின் பிராண்டு பெயரில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இதே தயாரிப்பைப் போன்ற மற்றொரு தொகுப்பு இ-பே இணைய தளத்தில் மூன்று தனிப்பட்ட விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அஸ்பெஸ்டாஸ் என்பது மனித உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான கனிமப் பொருளாகும். இதனால்இ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக வாங்கியுள்ள மணல் கலைக் கருவிகளை உடனடியாக பரிசோதித்து, சந்தேகம் இருப்பின் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
















