தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி, ஜூன் 4 அன்று தனது பிறந்தநாளில் தேசியவாதக் கொள்கைகளுடன் தனது சொந்த அரசியல் அமைப்பை தொடங்குவதாக அறிவிப்பார் என்ற யூகங்களால் தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக உள்ளது.
அவர் பா.ஜ.க.வில் அதிருப்தியில் இருப்பதாக ஊகங்கள் நிலவி வரும் நிலையில், காவி கட்சித் தலைவர் இரண்டு நாட்களில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதாக திங்களன்று (01) கூறினார்.
நடப்பு கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது குறித்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அண்மைய அறிவிப்புக்கு அண்ணாமலை காட்டிய எதிர்ப்பும், அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அண்ணாமலையின் கோரிக்கையும், அவர் தனது சொந்தக் கட்சியைத் தொடங்கத் தயாராகி வருவதால் மத்திய அரசை எதிர்க்கிறார் என்ற யூகங்களுக்கு வழிவகுத்தது.
2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், அண்ணாமலை அப்போதைய தி.மு.க. அரசைக் கேள்விக்குட்படுத்திப் பல செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியதுடன், ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தையும் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. ஆட்சியில் நடப்பதாகக் கூறப்படும் ஊழல் குறித்த அவரது விமர்சனம், பொது விவாதத்தின் முக்கியப் பொருளாக மாறியதன் விளைவாக, தி.மு.க. அவர் மீது வழக்குத் தொடர்ந்தது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் பா.ஜ.க.வின் முடிவைத் தொடர்ந்தும், தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நைனார் நாகேந்திரன் புதிய பா.ஜ.க. மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்காக டி.டி.வி. தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரைக் கட்சிக்குள் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய அந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி, கட்சித் தலைமை அவருக்குப் பதிலாக நாகேந்திரனை நியமித்த பிறகு பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்து வருகிறார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. பிரிவுக்குள் பல்வேறு சித்தாந்த மோதல்கள் உருவாகி வருவதாக அறிக்கைகள் வெளிவந்தன.
இந்த உட்கட்சிப் பிணக்கின் வெளிப்பாடாகவே, அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டாம் என முடிவு செய்ததாக நம்பப்படுகிறது.
அவர் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமை பலமுறை வலியுறுத்திய போதிலும், அண்ணாமலை அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், அண்ணாமலை தனது பிறந்த நாளான ஜூன் 4 அன்று, ‘மக்கள் சக்தி இயக்கம்’ (People’s Power Movement ) என்ற தற்காலிகப் பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் பரவி வருகின்றன.
திங்கள்கிழமை மாலை, அவர் டெல்லிக்குக் புறப்படுவதற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அண்ணாமலை, “இரண்டு நாட்களுக்குள் எல்லாவற்றிற்கும் பதிலளிப்பேன்,” என்று கூறிவிட்டு டெல்லிக்கு விமானத்தில் சென்றார்.
அண்ணாமலைக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என்பதால், அவர் கட்சியை விட்டு விலக வாய்ப்பில்லை என்று பா.ஜ.க. வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
ஆனால், கோயம்புத்தூரில் உள்ள அவரது ஆதரவாளர்களில் சிலர், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு மாற்றாக முன்னாள் மாநிலத் தலைவர் ஒரு புதிய கட்சியைத் தொடங்க வேண்டும் என்று விரும்பினர்.

















