அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு (SLAF) வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் கடல் வழியாக இலங்கைக்கு வந்துள்ளன.
இந்த விமானங்களின் வருகையானது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க பங்களிப்பையும் இது வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில், குறித்த ஹெலிகொப்டர்கள் தற்போது உள்ளமைவு மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த ஹெலிகொப்டர்கள் சேவையில் சேர்க்கப்பட்டு செயல்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் விமானப் படை குறிப்பிட்டுள்ளது.
TH-57 ரக ஹெலிகொப்டர்களானது இலங்கை விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்துவதோடு, பரந்த அளவிலான தேசியத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹெலிகொப்டர்களானது, முதன்மையாக விமானிப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மற்றும் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படும் பிற பொதுச் சேவைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
















