இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா காலத்தை நீட்டிக்க விரும்பினால், அது நிறைவடைவதற்கு முன்பாகவே கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முந்தைய விதிகளின்படி விசா காலம் முடிந்த 14 நாட்களுக்குள் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்றியமையாத சூழல்களில் மட்டுமே விசா நீட்டிப்பு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெளிநாட்டு விசா உள்ள தம்பதியருக்கு இந்தியாவில் குழந்தை பிறந்து, அக்குழந்தைக்கு இந்திய குடியுரிமை கோரப்படும் பட்சத்தில், முந்தைய 30 நாள் விசா நீட்டிப்பு விதிமுறைகள் அவர்களுக்குப் பொருந்தாது என்றும் புதிய அறிவிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
















