மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்றிரவு (03) நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்கவின் நிதானமாக 79 ஓட்டங்களும், அணித் தலைவர் குசல் மெண்டிஸின் வேகமாக 72 ஓட்டங்களுக்கும் இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஜமைக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 08.00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேந்தியத்தீவுகள் அணி பந்து வீசுவதற்கு தீரமானித்தது.
அதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது விக்கெட்டுக்கான பத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டீஸின் 136 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தால் சிறந்த தொடக்கத்தை பெற்றது.
இவர்களைத் தொடர்ந்து சரித் அசலங்க 45 ஓட்டங்களும், ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்களை குவித்தது.
பின்னர், சேஸிங்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் 66 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்து இலங்கைக்குப் பெரும் சவாலை அளித்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 பந்துகளில் 45 ஓட்டங்களை எடுத்தார்.
எனினும், கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
6.1 ஓவரில் 50 ஓட்டங்களுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் விக்கெட்டை இழந்து இருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீராக வீழ்ந்ததால் தேவைப்படும் ஓட்ட விகித்தை அதிகரிக்க அவர்களுக்கு வாய்ப்பு அமையவில்லை.
ரோஸ்டன் சேஸ் களத்தில் இருந்தபோது நம்பிக்கை இருந்தது, ஆனால் 4-67 என்ற பந்துவீச்சுடன் இருந்த துஷ்மந்த சாமீராவால் அவர் ஆட்டமிழந்தபோது அந்த நம்பிக்கை மழுங்கியது.
இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையு இழந்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டீஸ் தெரிவானார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை கிங்ஸ்டனிலும், மூன்றாவது போட்டி அடுத்த திங்கட்கிழமை சபீனா பார்க்கிலும் நடைபெறும்.
இதனிடையே, போட்டியின் இறுதிக் கட்டத்தில் மின்விளக்கு பழுதடைந்ததால் வழக்கத்திற்கு மாறாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர்.
அந்த நிலையிலேயே மேற்கிந்தியத் தீவுகளின் நிலைமை கைமீறிப் போயிருந்தது:
இன்னும் ஒரு விக்கெட் மீதமிருந்த நிலையில், அவர்களுக்கு எட்டு பந்துகளில் 43 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













