இங்கிலாந்தில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வெடித்துள்ள பிரிட்டிஷ் அரசியல் குழப்ப நிலையினை அமெரிக்க வெளிவிகாரத்துறை விமர்சித்துள்ளது.
இங்கிலாந்து அரசாங்கத்தை மறைமுகமாகக் கண்டிக்கும் விதமாக, கொலை செய்யப்பட்ட ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினருக்கு அனுப்பிய இரங்கல் செய்தியிலேயே அமெரிக்க வெளிவிகாரத்துறை, இந்த நடவடிக்கையை கருத்தியல் ரீதியான திணிப்பு என்றும் காவல்துறையின் இரட்டைக் கொள்கை எனக் கூறி விமர்சித்துள்ளது.
அத்துடன், இவை நாகரிக வீழ்ச்சியின் அப்பட்டமான அறிகுறிகளாகும் என்றும், அவை மேற்கத்திய நாடுகள் முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கவலைக்கிடமான நேரத்தில், ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் மக்களுக்கும் ஐக்கிய அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது – என்றும் அமெரிக்க வெளிவிகாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சவுத்தாம்ப்டன் துறைமுக நகரில் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த 18 வயது ஹென்றி நோவாக்கிற்கு காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்ட சம்பவம், இங்கிலாந்தில் பெரும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.
ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கில் 23 வயதான விக்ரம் திக்வாவுக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் வகையில், திங்களன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

















