ஓமான் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க இராணுவத்தால் தாக்கப்பட்ட ‘மாரிவெக்ஸ்’ என்ற எண்ணெய்க் கப்பலில் இருந்து திங்களன்று (08) 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய கடல்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முற்றுகையை அமெரிக்கா விதித்துள்ளதால், அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஈரானிய துறைமுகத்திற்குச் செல்லும் முயற்சியில் படையினரின் முற்றுகையை மீறியதைத் தொடர்ந்து, பலாவ் கொடியை ஏந்திய கப்பலைச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது.
தாக்குதல் நடந்த நேரத்தில் மரிவெக்ஸ் கப்பலில் சரக்குகள் ஏதும் இல்லை என்றும் அது மேலும் கூறியது.
மேற்கு ஆசியாவில் நிலவிய மோதலுக்கு மத்தியில், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், மாரிவெக்ஸ் கப்பல் மீது டிசம்பர் மாதம் அமெரிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், ஏப்ரல் 9 அன்று ஹார்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறிய ஒரு சில கப்பல்களில் இக்கப்பலும் ஒன்றாகும்.
எவ்வாறெனினும் தாக்குதலின் பின்னர் கப்பலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் ஹெலிகொப்டர் மூலம், ஓமானில் உள்ள மசிரா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இரண்டு நாட்களில் இந்தியா திரும்புவார்கள் என்றும் யாதவ் கூறியதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.















