பிரிட்டனின் ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage), தொழிற்சங்கங்கள் ஆளும் தொழிற்கட்சியுடனான தங்களது உறவை முறித்துக் கொண்டு, தனது கட்சியுடன் இணைய வேண்டும் என விடுத்த கோரிக்கையை பிரிட்டனின் முன்னணி தொழிற்சங்கங்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன.
‘தி டைம்ஸ்’ (The Times) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நைஜல் ஃபாராஜ், எதிர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தனது கட்சியின் மாநாட்டில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்களுக்கு உத்தியோகபூர்வ அழைப்பும் விடுத்திருந்தார்.
தொழிற்சங்க உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், மற்ற கட்சித் தலைவர்களை விட நைஜல் ஃபாராஜ் அதிக ஆதரவைப் பெற்றுள்ளார் என்று வெளியான தகவலைத் தொடர்ந்தே அவர் இந்த அரசியல் நகர்வை மேற்கொண்டிருந்தார்.
எனினும், தொழிற்சங்கத் தலைவர்கள் அவருக்குக் கடுமையான பதிலடிகளை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுத் தன் அரசியல் பலத்தைப் பெருக்க நினைத்த நைஜல் ஃபாராஜின் முயற்சிக்கு, தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரித்தானிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.














