இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் ஒரு பகுதியை செவ்வாய்க்கிழமை (16) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
அதைத் தொடர்ந்து வலுவான பின் அதிர்வுகளும் ஏற்பட்டன.
மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரமும், சுமார் 400,000 மக்கள் வசிக்கும் நகரமுமான பாலுவைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்த ஆரம்ப நில அதிர்வு ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான அதிர்வை ஏற்படுத்தியது.
இதனால், ஆங்காங்கே சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
முதல் நிலநடுக்கத்தின் மையம் பாலுவிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்கள்) கிழக்கு-தென்கிழக்கில் இருந்தது, மேலும் அது சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது. சுனாமி அபாயம் எதுவும் இல்லை.
இந்தோனேசியா பல நில அதிர்வுப் பிளவுகளால் பாதிக்கப்படுகிறது.
மேலும் அங்கு நிலநடுக்கங்களும் எரிமலைச் செயல்பாடுகளும் சாதாரணமாக நிகழ்கின்றன.
2018 இல் பாலு நகரைப் பேரழிவுக்குள்ளாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 மீட்டர் (10 அடி) உயர சுனாமியையும், மண் சரிவையும் ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 2021-ல், சுலவேசி தீவில் உள்ள மமுஜு நகருக்கு அருகே ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்தது 100 பேரைக் கொன்றது.
மேலும், பின் அதிர்வுகளுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் பல நாட்கள் திறந்தவெளியில் தஞ்சம் அடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















