ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவத்தில் ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்துவந்த தனிப்பட்ட தகராறு ஒன்று, நேற்று திடீரென எல்லை மீறி மோதலாக மாறியுள்ளது.
இதன்போதே சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த இளைஞரைத் தாக்கியுள்ளார்.
இந்த வன்முறை மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது சிகிச்சைக்காக வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட வீரகெட்டிய பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வீரகெட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் குறித்து வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.













