இன்றைய தினம் (12/07/2026) பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் கடந்த 10/07/2026 ம் திகதி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 6 குடும்பங்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக களத்திற்கு சென்றிருந்தார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்த பிரதியமைச்சர், கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பாகவே இது அமைந்திருந்தது எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விடயம் என பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அது முற்றிலும் தவறான கண்ணோட்டம் என்பதனை தெளிவுபடுத்தினார்.
இச்சம்பவத்தை பொறுத்தமட்டில் LRC நிறுவனத்தோடு கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான தீர்வை உரிய நகர்வுகளின் பின்னர் விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கும் முன் வருவோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அமைச்சர் லால்காந்த அவர்களுடனும் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக எமது அரசாங்கம் முந்நின்று செயற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, வலப்பனை பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர், அரச அதிகாரிகள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.













