கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடுவதற்கும், தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்குமாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களை நேரில் சந்தித்த சங்கத்தின் பிரதிநிதிகள், தங்களது நியாயமான கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தின் தலைவர் அஹமட் லப்பை சனோஸ், ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
தேசிய ரீதியாக ஒருமைப்பாட்டுக்கு வரும் வரை, தங்களது பாடசாலைகளுக்கு தரம் பெற்ற புதிய அதிபர்களை நியமிக்கக் கூடாது, தற்போது கடமை நிறைவேற்று அதிபர்களாக பதவி வகிப்பவர்களை, கல்வி வலயங்களில் ‘ஆசிரியர் சேவை விரிவுரையாளர்களாக’ உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இக்கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, இவ்விடயம் தொடர்பில் தாம் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், எனினும் இதற்கான இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட அதிபர்களுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து ஆளுநர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைவாக, இவர்களை பிரதி அதிபர்களாக அல்லது பதில் அதிபர்களாக கடமைக்கு நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அதிபர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்ற பாடசாலைகளில் இவர்களை பதில் அதிபர்களாக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
அதிபர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து, இன்னமும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாமல் இருக்கின்றவர்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என உறுதியளித்த ஆளுநர், இப்பிரச்சினைக்கு தீர்க்கமான மற்றும் சாதகமான முடிவு ஒன்றை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடமை நிறைவேற்று அதிபர்கள் ஒரு தீர்க்கமான ஒருமைப்பாட்டுக்கு வரும்பட்சத்தில் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்தார்.













