பிஃபா உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளின் உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய ‘பிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) திட்டம் தொடர்பாக ஏற்பட்ட தவறுகளுக்கு பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இருப்பினும், மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் சிரேஷ்ட நிர்வாகிகள் அவருக்குத் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனியார் முதலீட்டு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குத் தலா 40 மில்லியன் டாலர் வழங்குவதாக இன்ஃபான்டினோ உறுதியளித்திருந்தார். ஆனால், இந்தத் திட்டம் மிகவும் இரகசியமாகவும், பிஃபா கவுன்சில் மற்றும் உறுப்பு நாடுகளைப் புறக்கணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக, ஐரோப்பியப் கால்பந்து கூட்டமைப்பான ‘யுவேஃபா’ (Uefa), இன்ஃபான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அறிவித்ததுடன், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் லூயிஸ் ஃபிகோ ஆகியோர் அவரை உடனடியாகப் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தினர்.
விமர்சனங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மொராக்கோவில் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய இன்ஃபான்டினோ மற்றும் பொதுச் செயலாளர் மத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோம் ஆகியோர், பிஃபாவின் 211 உறுப்பு நாடுகளுக்கும் தங்களின் தவறுக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்திட்டத்தில் தவறுகள் நடந்ததை ஒப்புக்கொண்ட பிஃபா நிர்வாகக் குழு, இன்ஃபான்டினோவின் தலைமைக்குத் தங்களது முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
2027 மார்ச் மாதம் மொராக்கோவில் நடைபெறவுள்ள பிஃபா தலைவருக்கானத் தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிட இன்ஃபான்டினோ திட்டமிட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் ஆதரவு அவருக்கு வலுவாக உள்ளது.
இருப்பினும், யுவேஃபா உள்ளிட்ட ஐரோப்பிய அமைப்புகளின் எதிர்ப்பைச் சமாளித்து அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்பது இன்ஃபான்டினோவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















