சுகாதாரத் திணைக்களத்திற்குச் சொந்தமான கெப் ரக வாகனத்தில் கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் – சிலாபம் வீதியில் அமைந்துள்ள பட்டுளுஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து மேற்கண்ட வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன் போது வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்ருந்த 17 கிலோ 985 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தில் ராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரும், 22 வயதுடைய இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் குறித்த கஞ்சா தொகையைத் தணமல்விலைப் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








