மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதான வீதியின் கொட்டைக்கல்லு, கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலதிக வகுப்புகள் முடிந்து திரும்பிய மாணவர்கள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு மோட்டார் சைக்கிள், வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மீதும் மோதியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தின் போது 18 வயதுடைய கிஷன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு பேரில், 17 வயதுடைய கத்திசன் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் மூன்று மாணவிகளும் இரு மாணவர்களும் அடங்குவதுடன், அதில் ஒரு மாணவியின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












