சீனா- திபெத் எல்லையருகே, நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இலங்கையர்கள் யாரும் காயமடையவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்த இலங்கையர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதன் ஊடகப் பேச்சாளர் துஷாரா ரொத்ரிகோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், 85 முதல் 100 வரையிலான இலங்கையர்கள் நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையருகே பாயும் போட்கோஷி ஆற்றின் கரையோரம் பனி உருகியதால், ஒரே நேரத்தில் பெருமளவு நீர் பாய்ந்ததன் காரணமாக இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனி திடீரென உருகியதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
இந்த வெள்ளம், போட்கோஷி ஆற்றின் அருகே இருந்த ஒரு நெடுஞ்சாலையை முழுமையாக மூழ்கடித்ததுடன், சீன எல்லையில் இருந்த ஒரு சீன அரசாங்கக் கட்டிடத்தையும் முற்றிலுமாக அழித்தது.
நேபாள எல்லையில் உள்ள ஒரு பனியாற்றிலிருந்து சரிந்த பனி மற்றும் பாறைகளின் நிலச்சரிவு, போட் கோஷி ஆற்றின் துணை நதியான லெண்டே கோலா ஆற்றைத் தடுத்ததால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கீழ்நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளம் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் மலைப்பகுதிகளைத் தாக்கி, உள்கட்டமைப்பு, சாலைகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்களை அழித்தது.
மேலும், அண்டை நாடான திபெத்தின் கிரோங் மாகாணத்தில் கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், இந்த திடீர் வெள்ளத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேரைக் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.












