யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழி விவகாரத்தில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனைக் நாடாளுமன்ற உறுப்பினர் ஷுபிரிட்ஜ் இதை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையானது, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்குமென்று
அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது.
முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை .













