கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப் பொதிகள் கையாளுகைப் பகுதியில் அருகே கைவிடப்பட்டிருந்த சுமார் 32 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) வகை போதைப்பொருள் தொகை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இந்த போதைப்பொருள் தொகையை தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பயணப் பொதிகளுக்குள் காற்று புகாத வகையில் 60 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள், நேற்று (14) தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-405 விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தினால், குறித்த பயணி இந்த போதைப்பொருள் தொகையை அங்கு கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பயணப் பொதிகளை கொண்டு வந்த நபர் யார் என்பதை அடையாளம் காணும் நோக்கில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகை இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













