தங்களது கழுத்தில் கயிறு இறுக்கப்படும் போது மாத்திரம் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் தங்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் முன்வைத்து, தொடர்ச்சியான மக்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில், தற்போது அவ்வாறான செயற்பாடுகள் போதுமானளவில் இடம்பெறவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே கேள்விகளை எழுப்பி, மக்களை அரசியல் ரீதியாகத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக, தங்களுக்கு நேரடியாக அரசியல் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன.
மேலும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கொள்கை ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்கிறாம், அந்த வேறுபாடுகளை மறைத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாம் கூறவில்லை. எனினும், நாட்டில் எதிர்க்கட்சிகள் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை அரசியல் பொறுப்பு ஒன்று காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்














