இங்கிலாந்துக்கு எதிரான தொடர்ச்சியான தோல்வியைத் தொடர்ந்து இலங்கை அணியின் வீரர் தெரிவு, முடிவெடுப்பில் நிலைத்தன்மை மற்றும் உடற்தகுதி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தலைவர் குமார் சங்கக்கார கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த சங்கக்கார, இரு அணிகளுக்கும் இடையில் துடுப்பாட்டம், உடற்தகுதி மற்றும் போட்டி உத்தி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுவதாகத் தெரிவித்தார்.
“இரு அணிகளும் வெகுதூரத்தில் உள்ளன” என, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைன் தெரிவித்த கருத்துடன் இணங்கிய சங்கக்கார குறிப்பிட்டார்.
கமில் மிஷாராவை மூன்றாம் இலக்கத்துக்கு களமிறக்கியதுடன், இலங்கையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷனவை அணியில் இருந்து நீக்கியமை குறித்தும் சங்கக்கார கேள்வி எழுப்பினார்.
“வீரர்கள் தெரிவு மற்றும் முடிவெடுப்பதில் ஒருவித நிலைத்தன்மை இருக்க வேண்டும். சிறந்த வீரர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மேலும், அவர்கள் எந்தப் பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
உடற்தகுதி மற்றும் உடல் வலிமை ஆகியவை இலங்கை அணி மேம்படுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள் என்றும் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.
துடுப்பாட்ட உத்தியை இழக்காமல் பந்தை வலுவாக அடிக்கும் திறனை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பந்துவீச்சில் புத்திசாலித்தனமான முடிவெடுத்தல், போட்டியின் சூழ்நிலைகளை சரியாக மதிப்பிடுதல் மற்றும் அதற்கேற்ற களத்தடுப்பு அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிலும் முன்னேற்றம் தேவை எனத் தெரிவித்தார்.
“திறமை அவர்களிடம் உள்ளது. ஆனால் அந்தத் திறமையை விரைவாக சக்தி, திறன் ஆகியவற்றாக மாற்றி, அதனை வெற்றிகளாக மாற்ற வேண்டும்” என சங்கக்கார கூறினார்.
இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைனும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார போன்ற இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பந்தை பலத்துடன் அடிப்பதை விட, நேர்த்தியான நேரக்கணிப்பு மற்றும் இடைவெளிகளைப் பயன்படுத்தி எல்லைகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.
ஆனால், தற்போதைய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பந்தை அதிக வலிமையுடன் அடிக்க முயற்சிப்பதாகவும், வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது தங்களது துடுப்பாட்ட நிலையை இழப்பதாகவும் ஹுசைன் குறிப்பிட்டார்.
மேலும், போட்டியின் புள்ளிவிவரங்களிலும் இரு அணிகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இலங்கை அணி 50 ‘டொட்’ பந்துகளை எதிர்கொண்டதுடன், இங்கிலாந்து அணி ஓட்டங்களை பெறுவதிலும் முன்னிலை வகித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இன்றைய போட்டியின் அனைத்து புள்ளிவிவரங்களிலும் இங்கிலாந்து அணி இலங்கையை முழுமையாகக் கட்டுப்படுத்தியது” என ஹுசைன் தெரிவித்தார்.
இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்காவும், தாம் விரும்பும் T20 அணியாக இலங்கை இன்னும் உருவாகவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சங்கக்கார குறிப்பிட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளதுடன், இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.
இதன்மூலம், இலங்கைக்கு எதிரான T20 சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்தின் தொடர்ச்சியான வெற்றிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.















