நேற்றுடன் தீபன் உயிர்நீத்து 39ஆண்டுகள் ஆகிவிட்டன.நேற்றைய நிகழ்வுகளும் உட்பட கடந்த 39ஆண்டுகால அவருடைய நினைவு மேடைகளில் பெரும்பாலும் ஒரு வசனம் திரும்பத்திரும்ப கூறப்படுவதுண்டு.”திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்;தாகத்துடன் இருக்கிறான்” என்பதே அந்த வசனம் ஆகும்.இது திலீபனின் நினைவுகளை உணர்ச்சிகரமாக மகிமைப்படுத்தும் ஒரு வசனம்.
ஏன் தமிழ் மக்கள் அதை திரும்பத் திரும்ப கூறுகிறார்கள்? ஏனென்றால் திலீபன் எந்த விடுதலைக்காகப் போராடினாரோ,அந்த விடுதலை இன்றுவரை தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற பொருளில்தான் அவ்வாறு கூறப்படுகிறது.
அது உண்மை.கடந்த 39 ஆண்டுகால யதார்த்தம். இடையில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் 24 ஆண்டுகளுக்கு ஒரு கருநிலை நிலவியது.அதுவும் இப்பொழுது இல்லை. எனவே திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறார் என்பதுதான் கள யதார்த்தம்.
வெடுக்குநாறி மலையிலும்,குருந்தூர் மலையிலும் திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்.தையிட்டி விகாரையில் திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்.மயிலிட்டியில்,பலாலியில் காணிக்காகப் போராடும் மக்கள் மத்தியில் திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்.கிழக்கில், மயிலத்த மடு,மாதவணையில் போராடிக் கொண்டிருக்கும் பண்ணையாளர் மத்தியில் திலீபன் இப்பொழுதும் பசியோடு இருக்கிறான்.அங்கே மேய்ச்சல் தரையில்லாமல் பசியோடு மெலிந்திருக்கும் பசுக்கள் மத்தியில் திலீபன் இப்பொழுதும் பசியோடு இருக்கிறான்.17ஆண்டுகள் ஆன பின்னரும் விடுவிக்கப்படாத அரசியல் கைதிகளின் மத்தியில் திலீபன் இப்பொழுதும் பசியோடு இருக்கிறான்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் புதுப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கும் ஓர் அரசியல் களத்தில் திலீபன் இப்பொழுதும் பசியோடு இருக்கிறான்.ஆம் திலீபன் இப்பொழுதும் பசியோடும் தாகத்தோடும்தான் இருக்கிறான்.
அதுமட்டுமல்ல தமிழ் கிராமங்களில் அனேகமானவை ஆளில்லா வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாறியுள்ளன. மேலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் நாட்டில் இப்போதுள்ள அரசியல்வாதிகளை அல்லது தொழில் முனைவோரையோ,அல்லது அறிஞர்களையோ,அல்லது சான்றோரையோ,அல்லது பிரபல்யமானவர்களையோ முன்னுதாரணமாகப் பார்க்கவில்லை. மாறாக புலப்பெயர்ச்சியைத்தான் அவர்கள் முன்னுதாரணமாகப் பார்க்கின்றார்கள்.
இந்த அடிப்படையில் கூறின் ஆளில்லாத பாழடைந்த வீடுகள் எல்லாவற்றிலுமே திலீபன் இப்பொழுதும் பசியோடுதான் இருக்கிறான்.நாட்டை விட்டு எப்பொழுது வெளியேறலாம் என்று தவிக்கும் இளைய தலைமுறையினர் மத்தியில் திலீபன் இப்பொழுதும் பசியோடுதான் இருக்கிறான்.
இவ்வாறு திலீபன் அல்லது பார்த்திபன் இப்பொழுதும் பசியோடுதான் இருக்கிறான்;தாகத்தோடுதான் இருக்கிறான் என்றுதான் என்று கடந்த 39 ஆண்டுகளாக தமிழ்மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.திலீபன் பிரதிநிதித்துவப்படுத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாகக் கட்டி எழுப்பப்பட்ட கருநிலை அரசு தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த 17 ஆண்டுகளாகவும் தமிழ்மக்கள் அதைத்தான் திரும்பத்திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இனியும் எத்தனை ஆண்டுகள் தமிழ் மக்கள் அவ்வாறு கூறப்போகிறார்கள் ? திலீபனின் பசி எப்போது தீரும்? திலீபனின் தாகம் எப்பொழுது அடங்கும்? திலீபனின் பசியையும் தாகத்தையும் தீர்க்கவல்ல ஒரு தீர்வை தமிழ் மக்கள் எப்பொழுது வென்றெடுக்கப் போகிறார்கள்?அல்லது அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் கேட்டால்,அந்த தீர்வுக்காக தமிழ்மக்கள் எப்பொழுது போராடப் போகிறார்கள்?
திலீபனை,அன்னை பூபதியை நினைவு கூர்வது என்பது அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமல்ல,அந்த தியாகத்திற்குப் பின்னால் இருந்த அரசியலை நினைவு கூர்வது மட்டுமல்ல,அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்வதற்கு கடந்த 17 ஆண்டுகளாக யாரும் தயாரில்லை என்பதையும் நினைவு கூர்வதுதான். திலீபனுக்கு முன்னரான மிதவாத அரசியலிலும் அவ்வாறு உயிரைத் தியாகம் செய்யும் உண்ணாவிரதிகள் இருக்கவில்லை. திலீபனுக்குப் பின்னர் அன்னை பூபதி தன் உயிரைத் தியாகம் செய்தார். அதன் பின், அதாவது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த 17 ஆண்டுகளிலும்கூட அவ்வாறு தமது உயிரைத் தியாகம் செய்வதற்கு எந்த ஒரு அகிம்சைப் போராளியும் தயாராக இல்லை.
இதை இப்படி எழுதுவதன் நோக்கம்,இந்தக் கட்டுரையானது தமிழ் மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றோ அல்லது தீக்குளிக்க வேண்டும் என்றோ கேட்கின்றது என்பதல்ல.அகிம்சைப் போராட்டம் என்பது தன்னைத் தானே வருத்துவதுதான். வன்முறைப் போராட்டமானது எதிரியை வருத்தும்.ஆனால் அறவழிப் போராட்டமானது தன்னைத் தானே வருத்தும். அறவழிப் போராளி தன்னைத்தானே வருத்துவதன் மூலம் தான்சார்ந்த மக்கள் மத்தியில் கொதிப்பை,நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்துவார்.
அதாவது தங்களுக்காக ஒரு போராளி தீக்குளிக்கும்போது,அல்லது தங்களுக்காக ஒரு போராளி அணுவணுவாகச் சாகும்போது,அது அவர் எந்த மக்களைப் பிரதிபலிக்கிறாரோ,அந்த மக்கள் மத்தியில் நொதிப்பை, கொந்தளிப்பை,கொதிப்பை ஏற்படுத்தும்.அதன் இறுதி விளைவாக கொதித்தெழும் மக்கள் அந்தப் போராட்டத்தை முன்னுக்கு நகர்த்துவார்கள்.இதுதான் அகிம்சையின் அரசியல்.
அகிம்சையோ ஹிம்சையோ எந்தப் போராட்டமானாலும் அதில் போராளி தன்னைத் அர்ப்பணிக்க தன்னை முழுமையாக இழக்கத் தயாராக இருந்தால் தான் மக்களின் நன்மதிப்பை அபிமானத்தை வென்றெடுக்கலாம்.அறவழிப் போராளி தன்னை இழக்கத் தயாராகப் போராடும்போது அது அவர் எந்த மக்களின் விடுதலைக்காக தன்னை தியாகம் செய்ய முன்வருகிறாரோ, அந்த மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தும்.அதாவது மக்களைத் திரட்டும். மக்களை எழுச்சி அடையச் செய்யும்.
திலீபனின் இறுதி நாட்களில் அந்த எழுச்சி ஏற்பட்டது.ஒரு பச்சை இலை சிறிது சிறிதாக உலர்ந்து காய்ந்து சருகாவது போல 12 நாட்களாக உயிர் உலர்ந்து இறந்த பொழுது அவரைச் சூழ்ந்திருந்த மக்கள் மத்தியில் கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. திலீபனின் இறுதி உரைகளிலும் அதைக் காண முடிகிறது. மக்கள் எழுச்சியைத்தான் அவர் விரும்பினார்.மக்கள் எழுச்சிதான் விடுதலைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பினார்.எனவே அகிம்சையின் இறுதி விளைவு மக்கள் எழுச்சிதான்;மக்கள் திரட்சிதான்.
திலீபனின் உண்ணாவிரதம் தமிழ் மக்களை கொதிக்க வைத்தது; கொந்தளிக்க வைத்தது.இந்திய-இலங்கை உடன்படிக்கை,இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னம் போன்றவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் கூட்டு உளவியலைத் திருப்பியது.இந்திய அமைதி காக்கும் படையினரை கும்பம் வைத்து,கற்பூரம் கொளுத்தி,ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்களின் கூட்டு உளவியலை மாற்றியதில் கிலீபனின் 12 நாட்களுக்கும் பெரிய பங்கு உண்டு.அதன் அடுத்த கட்டமாக ஒரு போர் அரங்கு திறக்கப்பட்டது.
அறவழிப் போராட்டங்களில் இறுதி விளைவு மக்களை நொதிக்கச் செய்வதுதான்;மக்களைத் திரட்டுவதுதான்.அதை திலீபன் தனது கடைசி உரைகளில் சுட்டிப்பாகக் குறிப்பிட்டிருந்தார்.எனவே திலீபனின் பசியைப் போக்கவும்,தாகத்தைத் தீர்க்கவும் ஒரே வழி திலீபனின் இறுதி உரைகளில் கூறப்படுவது போல தமிழ் மக்களை எழுச்சிகொள்ள வைப்பதுதான். தமிழ் மக்களை ஆகப்பெரிய திரட்சியாக மாற்றுவதுதான்.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய சக்திகள் அதனைப் பொருத்தமான விதத்தில் செய்யத் தவறிவிட்டன. ஆங்காங்கே தொடர்ச்சியற்ற சிறிய மற்றும் பெரிய மக்கள் திரட்சிகள்,எழுச்சிகள் ஏற்பட்டிருந்தாலும்கூட,அவை தொடர்ச்சியானவை அல்ல.கொழும்புக்கு அல்லது ஏனைய தரப்புகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல.
எனவே திலீபனின் நினைவுகளை மகிமைப்படுத்துவது என்பது மக்களைத் திரட்டியுறச் செய்வது;மக்களை எழுச்சி கொள்ள வைப்பது.ஆனால் அதைச் செய்ய ஏன் தமிழ்த் தேசிய சக்திகளால் முடியவில்லை? ஏனென்றால் உள்ளதில் பெரிய கட்சி தன்னைத்தானே திரட்ட முடியாமல் நீதிமன்றத்தில் நிற்கின்றது. ஏனைய கட்சிகள் பெரிய கட்சியின் இடத்தை நிரப்பும் அளவுக்கு வளர முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.
அதாவது தமிழ்த் தேசிய கட்சிகளாலும் செயற்பாட்டாளர்களாலும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியவில்லை.ஆகமொத்தம் கடந்த 17 ஆண்டுகால தமிழ்த்தேசிய அரசியல் எனப்படுவது திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மக்கள் எழுச்சிக்களையோ மக்கள் போராட்டங்களையோ உற்பத்திசெய்ய முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது. இது என்னுடைய கூற்று அல்ல. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கள அரசியல் செயற்பாட்டாளர் ஆகிய ஒரு கத்தோலிக்க மதகுரு கூறியது.அவர் அப்பொழுது சொன்னார்,”12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் திருப்பகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்களாக காணப்படுகிறார்கள்” என்று. அதற்கு பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நிலைமை அப்படித்தான் இருந்தது. இப்பொழுதும் நிலைமை அதுதான்.”பார்த்திபன் இப்பொழுதும் பசியோடுதான் இருக்கிறான்,தாகத்தோடு இருக்கிறான்” என்று தமிழ்மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?













