DIGIECON 2030 தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதார இலக்கை அடைவதற்கு இலங்கை தயாராகி வரும் பின்னணியில், நாட்டின் மின்னணு வணிக (E-commerce) துறையை சர்வதேச சந்தையை வெற்றிகொள்வதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த ஒரு விரிவான அறிவியல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
‘ODI Global’ மற்றும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM) இணைந்து தயாரித்த இந்த அறிக்கை வெளியீட்டு விழா மற்றும் கொள்கை விவாத மாநாடு, அண்மையில் ICTA கேட்போர் கூட வளாகத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் அங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்றது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறைகளில் ஈடுபட்டுள்ள நாட்டின் முன்னணி 953 நிறுவனங்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வின் படி, நாட்டின் ஏற்றுமதியாளர்களில் 70% பேரும், சிறு மற்றும் நடுத்தர அளவு (MSME) ஏற்றுமதி நிறுவனங்களில் 72% பேரும் ஏற்கனவே தங்களது வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காக E-commerce தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
இலங்கையின் எந்தப் பகுதியில் உள்ள ஒரு சிறு தொழிலதிபரும் புவியியல் தடைகள் இன்றி உலகளாவிய சந்தையை சென்றடைவதற்கான உண்மையான சக்தி E-commerce தொழில்நுட்பத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டை (SLUDI), GovPay செலுத்தல் முறைமை, தரவு பாதுகாப்புச் சட்டம், தேசிய AI நிறுவனம் மற்றும் GovTech நிறுவனம் ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் வணிகங்களுக்குத் தேவையான வலுவான உட்கட்டமைப்பை அரசாங்கம் கட்டியெழுப்பி வருவதாகவும், இதற்காக உலக வங்கியின் 50 மில்லியன் டாலர் கடன் உதவியும் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சுங்க தாமதங்கள், விநியோக நடைமுறை (Logistics) சவால்கள், சலுகை சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் 90% பேர் இன்னமும் பாரம்பரிய வங்கிப் பரிமாற்றங்களையே நம்பியிருப்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதால், குறைந்த மதிப்புள்ள ஏற்றுமதிப் பொருட்களுக்காக தளர்த்தப்பட்ட சுங்க நடைமுறைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் லொஜிஸ்டிக்ஸ் அமைப்புகளை விரைவாக நிறுவ வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் GovTech ஸ்ரீலங்கா தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ODI Global நிறுவனத்தின் சர்வதேச பொருளாதார வளர்ச்சி குழுவின் பணிப்பாளர் பேராசிரியர் டர்க் வில்லெம் டே வெல்டே, SLASSCOM தலைவர் சம்பத் ஜெயசுந்தர, ODI Global சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேஷன் விக்னராஜா உட்பட அரச மற்றும் தனியார் துறையின் உயர் மட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.















