களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அதன் சாரதி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
களுத்துறை குற்றப்பிரிவின் பொலிஸ் குழுவினர், போம்புவெல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு அதன் சாரதிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், குறித்த சாரதி பொலிஸாரின் உத்தரவைப் பின்பற்றாமல் தொடர்ந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் வரை முச்சக்கர வண்டியைப் பின்தொடர்ந்த பொலிஸார், நாகொட பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த சாரதி, நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் களுத்துறை, ராஜவத்தை பகுதியைச் சேர்ந்த ‘ராஜவத்தை சஞ்சு’ என அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து போதைப்பொருட்களையும் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














