முக்கியமான இடைத்தேர்தலுக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை (02) அன்று, ஹார்முஸ் நீரிணையில் உள்ள சில ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், கெஷ்ம் தீவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
இந்தத் தாக்குதல்கள், முழு அளவிலான மோதல்களின் தொடக்கமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நடவடிக்கைகளாகவே தோன்றின.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை (03) நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்த சூழலிலேயே இவை நிகழ்ந்துள்ளன.
மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற இந்த போர், அமெரிக்காவில் பெட்ரோல் விலை மற்றும் பொருளாதாரத்தின் பிற அம்சங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், காங்கிரஸின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முயலும் குடியரசுக் கட்சியினருக்கு ஒரு பலவீனமான புள்ளியாக மாறியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் முழு அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடும் என்ற சூழலால் அந்தப் பிராந்தியமே பதற்றத்தில் உள்ளது.
அதேவேளையில், எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, இஸ்ரேலும் மத்திய கிழக்கிலுள்ள அதன் சில நட்பு நாடுகளும் ட்ம்ப்பிடம் வலியுறுத்தி வருகின்றன.
இந்தப் போர் உலகச் சந்தைகளை உலுக்கியதோடு, ஈரானுக்குப் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் இறுதியாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தாக்குதல்களை நடத்தியதாக அறியப்பட்டது.
இருப்பினும், ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் உலகச் சந்தையை அடைவதைத் தடுக்கும் நோக்கில், ஈரானுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினர் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு, கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும், மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலும், கூடுதல் படைகளும் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டு வருகின்றன.
தாக்குதல்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாக, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளதாகக் கருதி, ஓரளவு நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
வான்ஸ் கடந்த வாரம் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாயிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், இது குறித்த கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.















