1990 சுவசெரிய அவசர நோயாளர் அம்பியூலான்ஸ் சேவைக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 100 புதிய நோயாளர் அம்பியூலான்ஸ்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்திய அரசின் நிதிக்கொடையின் கீழ் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய அவசர நோயாளர் அம்பியூலான்ஸ் சேவை, 2018ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் ஊடாக நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 24 மணித்தியால இலவச அவசர நோயாளர் அம்பியூலான்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது நாளொன்றுக்கு சுமார் 1,000 முதல் 1,200 வரையான நோயாளர்கள் முதலுதவி சிகிச்சையுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த நோயாளர் அம்பியூலான்ஸ்கள் ஆண்டொன்றுக்கு சுமார் 9 மில்லியன் கிலோ மீற்றர் பயணிப்பதால், தற்போதுள்ள 322 நோயாளர் அம்பியூலான்ஸ்கள் இயந்திரக் கோளாறுகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் விசேட கோரிக்கைக்கு அமைய, 1990 சுவசெரிய சேவைக்காக முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய நோயாளர் அம்பியூலான்ஸ்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிதிக்கொடையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.














