ஈரானிடமிருந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent ) அண்மையில் வொஷிங்டன் டி.சி.-யில் உள்ள தமது இல்லத்திலிருந்து அமெரிக்க இராணுவத் தளத்திற்கு இடம்பெயர்ந்துள்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முதலில் வெளியிட்டது.
அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிரான ஈரானின் சதித்திட்டங்கள் முற்றிய நிலையை எட்டியுள்ளதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் கடந்த மாத இறுதியில் ஒரு குறிப்பாணையில் எச்சரித்திருந்தார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்த நடவடிக்கைகளுக்கு பெசென்ட் தலைமை தாங்கி வருகிறார்.
‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையானது, கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரானை வற்புறுத்தும் நோக்கம் கொண்டது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதைத் தொடர்ந்து, மிக முக்கியமான இந்த நீர்வழிப்பாதை பெருமளவுக்கு மூடப்பட்டுள்ளது.
ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கக் கடற்படை விதித்துள்ள முற்றுகையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த பொருளாதார அழுத்த நடவடிக்கையில், ஈரானுடனான பரிவர்த்தனைகளுக்கு உதவும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வங்கிக் கிளைகள் மற்றும் பிற நிதிச் சேவை நிறுவனங்கள் மீதான தடைகளும் அடங்கும்.















