2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பந்தை சேதப்படுத்திய சம்பவம் (Sandpapergate) தொடர்பில், அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா தனது புதிய நூலான Sabr இல் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித்தலைவர் பட் கம்மின்ஸ் வன்மையாக நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கம்மின்ஸ், கெமரூன் பான்கிராஃப்ட் மைதானத்திற்கு மணர்த்தாளைக் கொண்டு சென்றமை அணியின் அனைத்து வீரர்களுக்கும் தெரிந்திருந்ததாக கவாஜா கூறியிருப்பது முற்றிலும் தவறானது எனத் தெரிவித்தார்.
பந்தை சேதப்படுத்துவது தொடர்பில் அணிக்குள் எவ்வித முன்கூட்டிய திட்டமிடலோ அல்லது குழுக் கூட்டமோ இடம்பெறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கவாஜா தனது நூலில் தன்னைப் பற்றியும் ஏனைய வீரர்களைப் பற்றியும் பொறுப்பற்ற கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும், அவை சக வீரர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கம்மின்ஸ் குற்றஞ்சாட்டினார்.
இந்தக் கருத்துகள் தனது குடும்ப வாழ்க்கையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது தோல் நிறம் காரணமாகவே அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பு தனக்கு வழங்கப்படவில்லை என கவாஜா தனது நூலில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டையும் கம்மின்ஸ் வன்மையாக மறுத்துள்ளார்.
இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு தெளிவான ஆதாரங்கள் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தோல் நிறம் அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
கவாஜாவுக்குத் தனது அனுபவங்களையும் கருத்துகளையும் வெளியிடுவதற்கு உரிமை உள்ள போதிலும், அவர் முன்வைத்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பெட் கம்மின்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
















