லாஃப்ஸ் (LAUGFS) உள்நாட்டு எரிவாயு விலைகளை அண்மையில் அதிகரித்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, அந்நிறுவனத்தின் அதிகாரிகளை அழைக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, நாளை (16) காலை 10.00 மணிக்கு அதிகாரசபையில் முன்னிலையாகி, விலை அதிகரிப்பு தொடர்பான விளக்கங்களை வழங்குமாறு லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு விலைகளை அதிகரித்திருந்தது.
இதன்படி, இதுவரை 4,965 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 1,988 ரூபாவாகக் காணப்பட்ட 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலைத் திருத்தத்திற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சர்வதேச சந்தை விலைகள், கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.















