பட்ஜெட்; மருத்துவமனைகள்; வட்டார சபைகள் – நிலாந்தன்.
ஒரு தமிழ்த் தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர் அண்மையில் முகநூலில் ஒரு விடயத்தைப் பகிர்ந்திருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் ஒருவர் புதிதாக வட்டார சபையை உருவாக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது பற்றிய குறிப்பு அது.கிராமமட்ட அடிமட்ட அமைப்பாகிய வட்டார சபையை உருவாக்கும் ஒரு நிகழ்வில் ஒரு அமைச்சருக்கு என்ன வேலை? அவருக்கு வேறு அமைச்சு வேலைகள் இல்லையா? இப்படி வட்டார சபையை உருவாக்கும் கூட்டத்தில் வந்து குந்தி கொண்டிருக்கிறார்? என்ற பொருள்பட அந்த பதிவு அமைந்திருந்தது.
அது ஒரு விமர்சனமாகவும் கிண்டலாகவும் எழுதப்பட்ட பதிவு. ஆனால் அங்கே சிரிப்பதற்கு எதுவும் இல்லை. அமைச்சர் ஒருவர் வட்டார சபை உருவாக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்று சொன்னால்,வட்டார சபைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பொருள்.இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால், அடிமட்ட அமைப்பாகிய வட்டார சபையை பலப்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி எந்த அளவுக்கு ஈடுபாடாக இருக்கிறது என்பதனை அது காட்டுகிறது.
ஆனால் தமிழ்க் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இருப்பவற்றில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சியானது தானே தன்னை ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறுகிறது.கட்சி சம்பந்தப்பட்ட வழக்குகள் இப்பொழுதும் நீதிமன்றத்தில் உள்ளன.தங்கள் கட்சிக்குள் வரும் பிரச்சினைகளை தீர்க்க முடியாத சட்டத்தரணிகள்,எப்படி இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போகிறார்கள் ? எப்படி நீதிக்கான போராட்டத்தில் தமது சட்டப் பங்களிப்பை வழங்கப் போகிறார்கள் ?
இருக்கின்ற தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது தமிழரசு கட்சி தான். வடக்கு கிழக்காக கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது.அது தன்னைத் தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி என்றும் கூறிக்கொள்கிறது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு கிடைத்த அதேயளவு ஆசனங்கள் அரசாங்கத்திற்கும் கிடைத்தன. ஒரு தென்னிலங்கை மையக் கட்சிக்கு அதுவும் அரசாங்கத்துக்கு இவ்வாறு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிக்கு நிகரான ஆசனங்கள் கிடைத்தமை என்பது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டிராத ஒரு தோற்றப்பாடு.யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களில் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவாக பகிரங்கமாக மேடை ஏறுவது என்பதும் இனப் பிரச்சினை கூர்மை அடைந்த பின்னரான தமிழ்த் தேசிய அரசியலில் இதுதான் முதல் தடவை. தன்னைத் தானே தீர்மானிக்கும் கட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சிதானே இதற்கெல்லாம் பொறுப்பு?
அதேசமயம் தமிழரசுக் கட்சி தளம்பிக் கொண்டிருக்கும் கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில், தன்னை ஒரு பதில் பெரு நீரோட்டக் கட்சியாகக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முடிந்திருக்கிறதா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்டு தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் அவர்கள் இரண்டு தடவை தமிழகத்துக்குப் பயணம் செய்திருக்கிறார்கள்.எனினும் தாயகத்தில் அவர்களுடைய செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் இப்பொழுதும் ஒரு மாற்று நீரோட்டக் கட்சி போலதான் அது தோற்றமளிக்கிறது.தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஐங்கரநேசன் அங்கே அதிகமாகக் கூட்டங்களை ஒழுங்கமைக்கின்றார்; ஆட்களைத் திரட்டுகின்றார்.
இவ்வாறாக தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் அல்லது குழப்பம் அல்லது பின்னடைவுகள் அல்லது தளர்வு போன்றவற்றின் பின்னணியில்தான்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் வாக்குகள் கிடைத்தன.கடந்த அரை நூற்றாண்டு காலப் பகுதிக்குள் ஒரு தென்னிலங்கை மையக் கட்சியானது தனக்கும் தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறும் ஒரு நிலைமை தோன்றியது.அந்த நிலைமையைத் தொடர்ந்தும் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தேசிய மக்கள் சக்தியானது வட்டாரங்கள் தோறும் வட்டார சபைகளை உருவாக்கி வருகிறது.
ஒருபுறம் பிரஜா சக்தி. இன்னொருபுறம் வட்டார சபைகள்.வட்டார சபைகளைப் பலப்படுத்துவதற்காக அடிக்கடி அமைச்சர்கள் அல்லது பிரதி அமைச்சர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வருகிறார்கள்.மூன்று நாட்களுக்கு ஒரு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் வடகத்திற்கு வருவதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.அரசு நிகழ்வுகளையும் அரச வளங்களையும் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி தனது கிராமமட்ட கட்டமைப்புகளைத் தமிழ்ப் பகுதிகளில் பலப்படுத்தி வருகிறது.
உதாரணமாக தென்மாராட்சியில் இந்த ஆண்டு இதுவரை காலப் பகுதிக்குள் பிரதேச சக்தியின் ஒருங்கிணைப்பின் கீழ் 13 குளங்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. வடமாராட்சியிலும் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.அது தொடர்பான புள்ளி விபரங்களை இக்கட்டுரை எழுதப்படுகையில் பெற முடியவில்லை.
கிளிநொச்சியில் வட்டார சபைகளை உருவாக்குவதற்கு என்று ஒருவர் போதிய அதிகாரங்களோடு களம் இறக்கப்பட்டிருக்கிறார்.இவர் அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளை கேள்வி கேட்கக்கூடிய பலத்துடன் காணப்படுவதாக ஓர் அரசியற் செயற்பாடடாளர் தெரிவித்தார்.மலையகத் தமிழரான இவர் கிளிநொச்சியில் உள்ள மமலையக வம்சா வழியினரை தன்னுடைய கட்டமைப்புக்குள் ஈர்த்துக் கொள்வதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதாகக் கூறப்படுகிறது. கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மலையகத் தமிழர்களைக் குறித்து ஒரு தொலைபேசி உரையாடலில் பேசிய வார்த்தைகள் அங்குள்ள மலையகத் தமிழர்கள் மத்தியில் அவரை பலவீனப்படுத்தியிருக்கின்றன.சிறீதரனுக்கு எதிராக சந்திரகுமாரும் சுமந்திரனும் மலையகத் தமிழர்களை அரவணைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.இப்பொழுது தேசிய மக்கள் சக்தியும் அதைத்தான் செய்கின்றது.அதிலும் குறிப்பாக அண்மைக் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் கிராம மட்ட அமைப்புகளில் பெருமளவுக்கு ஈர்க்கப்பட்டிருப்பவர்கள் யார் என்று பார்த்தால்,ஏற்கனவே சந்திரகுமாரோடு சேர்ந்து உழைத்தவர்கள்தான் என்றும் ஒரு பொதுவான அவதானிப்பு உண்டு. வடமராட்சியிலும் முன்பு ஈபிடிபியோடு அதிகம் இணைந்து செயல்பட்டவர்கள் இப்பொழுது அரசாங்கத்தை நோக்கி ஈர்க்கப்படுவதாக ஓர் அவதானிப்பு உண்டு.
இவ்வாறாக தேசிய மக்கள் சக்தியானது, கிராம மட்டத்தில் வட்டார சபைகளை உருவாக்கி தனது கீழ் மட்டக் கட்டமைப்புகளை படிப்படியாக பலப்படுத்தி வருகின்றது.இன்னொருபுறம் புத்திஜீவிகளையும் படைப்பாளிகளையும் ஊடகவியலாளர்களையும் யூடியூப்பர்களையும் எப்படித் தன்வசப்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயற்பட்டு வருகிறது.
அண்மையில் தென்மராட்சியில் ஓர் ஊடக மையம் உருவாக்கப்பட்டது.ஏற்கனவே வடமராட்சிக்கும் ஊடக மையம் ஒன்று உண்டு. பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் யாழ் ஊடக மையத்தில் இருந்து பிரிந்து உருவாகியிருக்கும் ஆகப்பிந்திய ஊடக மையம் தென்மராட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.பிரதேச மட்டங்களில் ஊடக மையங்கள் உருவாக்கப்படுகின்றன.பிரதேச ஊடகவியலாளர்கள் தங்களுக்கு என்று தனித்துவமான கட்டமைப்புகளை உருவாக்குவதில் தவறில்லை.ஆனால் அது யாழ்.ஊடக அமையத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்க்க முடியாமல் பிரிந்து போவது அல்லது அந்த முரண்பாட்டை வெளிச்சக்திகள் கையாள்வது போன்ற பரிமாணங்களைக் கொண்டிருந்தால் அது ஏதோ ஒரு விதத்தில் தமிழ்த் திரட்சியைப் பாதிப்பதுதான்.
அண்மையில் தென்மராட்சியில் திறக்கப்பட்ட புதிய ஊடக மையமும் அப்படிப்பட்டது என்றுதான் ஊடக வட்டாரங்களில் கருதப்படுகிறது.அரச ஊடக அமைச்சரின் சந்திப்பைப் புறக்கணிப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னணியில், யாழ் ஊடக அமையத்தோடு முரண்பட்ட ஒரு பகுதி ஊடகவியலாளர்கள் இணைந்து தென்மராட்சியில் புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊக்குவிக்கின்றது அல்லது முரண்பாடுகளைக் கையாளுகின்றது என்று கருதத்தக்க விதத்தில் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் ஒருவர் தென்மராட்சி ஊடக மையத்தில் ஓர் ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார்.அந்த மையம் திறக்கப்பட்ட அடுத்த நாள் இது நடந்தது.
ஊடகவியலாளர்களை மட்டுமல்ல, புத்திஜீவிகளை,படைப்பாளிகளைக் கவரும் வேலைகளும் தொடர்ந்து நடக்கின்றன.இக்கட்டுரை எழுதப்படுகையில் திருகோணமலையில் ஓர் இலக்கியச் சந்திப்பு இடம்பெறுகிறது.இந்த இலக்கியச் சந்திப்பின் பின்னணியில் இருப்பவர் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு ஜேவிபி செயற்பாட்டாளர்.இதன் முன்னணியில் நிற்பவர்கள் ஏற்கனவே திசைகாட்டிக்கு ஆதரவாக தேர்தல்களில் செயற்பட்டவர்கள்.உதாரணமாக யாழ்ப்பாணம் சுளிபுரத்தைச் சேர்ந்த “சத்திய மனை” என்ற பெயரைக் கொண்ட நூலகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருபுறம் பேசிய மக்கள் சக்தியானது புத்தகங்களைத் தடுக்கின்றது. அல்லது புத்தக வெளியீடுகளை தடுக்கின்றது.இதுதொடர்பாக அந்தக் கட்சியோடு சேர்ந்து செயற்படுகின்ற தமிழ் இலக்கியவாதிகள்,புத்திஜீவிகள் தமது எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை.இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தடுக்கப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறாக தமிழ் மக்கள் மத்தியில் காணப்படக்கூடிய முரண்பாடுகளை கையாள்வதன் மூலமும்,தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்ட வெற்றிடத்தை நிரப்பும் விதத்தில் கீழ்ப்பட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் தேசிய மக்கள் சக்தியானது, தன்னைப் படிப்படியாகப் பலப்படுத்தி வருகின்றது.
வட்டார சபைகளை உருவாக்கும் நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்து கொள்வது என்பது இதுபோன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளோ இதுதொடர்பாக எந்த விதமான கட்டமைப்பு சார்ந்த தரிசனங்களுமின்றிக் காணப்படுகின்றனவா? அல்லது சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் தமக்கு வாக்குகள் திரளும் என்று கற்பனை செய்கின்றனவா?
குறிப்பாக,மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் கட்சிகள் இந்த விடயத்தில்,அந்தத் தேர்தலை நோக்கிக் கடுமையாக உழைத்து வருகின்றனவா?அல்லது வெறுவாய் சப்புகின்றனவா?
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் வடக்கில் மாகாண அமைச்சின் பொறுப்பின் கீழ் இருந்த மாவட்ட வைத்தியசாலைகள் 4 மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதாவது ஏற்கனவே தேய்ந்து போயுள்ள 13ஆவது திருத்தம் மேலும் தேயப் போகிறது.தேசிய மக்கள்சக்தியின் புதிய அடிமட்டக் கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்படுபவர்களில் ஒருபகுதியினர் மேற்படி மாகாண சபைத் தேர்தலைக் கேட்கும் கட்சிகளுக்குள் இருந்து உடைத்தெடுக்கப்படும் ஓர் அரசியல் சூழலில்,மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால் என்ன நடக்கும்?













