இலங்கையின் மின்சாரத்துறை நிறுவனமான லக்தனவி லிமிடெட் (Lakdhanavi Limited), இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 57 மெகாவாட் திறன் கொண்ட இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான 75 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 25 பில்லியன் ரூபாய்) பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்களுக்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) சந்தையில் லக்தனவி நிறுவனம் முதன்முறையாகக் கால்பதித்துள்ளது. இது பிராந்திய மின் உற்பத்தித் துறையில் இலங்கையின் பொறியியல் நிபுணத்துவத்திற்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையம், அந்தமான் தீவின் போர்ட் பிளேர் பகுதியில் உள்ள ஹோப் டவுனில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தீவின் மின் உற்பத்தி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உட்கட்டமைப்பின் ஊடாக நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசுக்குச் சொந்தமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனின் (NTPC) முழு உரிமையிலான துணை நிறுவனமான NTPC வித்யுத் வியாபார் நிகாம் லிமிடெட் (NVVN) நடத்திய சர்வதேச போட்டி ஏலத்தின் மூலம் லக்தனவி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இதன்போது, மிகக் குறைந்த விலையை முன்வைத்த ஏலதாரராக (L1) லக்தனவி நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2026 செப்டெம்பர் 21ஆம் திகதி இந்தியாவின் நொய்டாவிலுள்ள NTPC அலுவலக வளாகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. NVVN, லக்தனவி மற்றும் LTL ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
திட்டத்திற்கான பொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகளை லக்தனவி லிமிடெட் நிறுவனத்தின் பொறியியல் குழு முன்னெடுக்கவுள்ளதுடன், மின் உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை பின்லாந்தைச் சேர்ந்த Wärtsilä Corporation நிறுவனம் வழங்கவுள்ளது.
1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் LTL Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட லக்தனவி, சுதந்திர மின் உற்பத்தியாளராக (IPP) பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ளது.
அத்துடன், அனல் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் சேவைகளையும் (O&M) இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இதற்கு முன்னர் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள லக்தனவி நிறுவனம், இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியச் சந்தையிலும் தனது வர்த்தக இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.















