பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) சார்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற அமெரிக்க அரசு அதிகாரிகளைக் படுகொலை செய்யத் திட்டமிட்டதற்காகவே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
நியூயோர்க்கின் புரூக்ளினில் அமெரிக்க மாவட்ட நீதிபதி எரிக் ஆர். கொமிட்டி, 48 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட்டுக்கு நவம்பர் 17 அன்று 330 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.
இவர், எல்லைகளைத் தாண்டிய பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றது மற்றும் கூலிப்படையைக் கொண்டு கொலை செய்யத் திட்டமிட்டது ஆகிய குற்றங்களுக்காக, 2026 மார்ச் மாதம் கூட்டாட்சி நடுவர் குழுவால் (federal jury) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.
குற்றவாளி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் பயிற்சி பெற்ற ஓர் உளவாளி என்றும், அமெரிக்க மண்ணில் அரசியல் படுகொலைகளை ஏற்பாடு செய்வதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தார் என்றும் நீதித்துறை கூறியது.
ட்ரம்ப் தான் இறுதி இலக்காக இருப்பார் என்று அவர் நம்பியபோதிலும், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி ஆகியோரையும் சாத்தியமான இலக்குகளாக அவர் கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2020 ஜனவரியில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசெம் சுலைமானியின் படுகொலைக்குப் பழிவாங்க வேண்டும் என்ற ஈரானின் விருப்பமே, மெர்ச்சன்ட் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைக்கு உந்துதலாக இருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
















