வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி, அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களாகக் காண்பித்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெற்று சிலிண்டர்களுக்கு புதிதாக நீல நிற வர்ணம் பூசப்பட்டிருந்தாலும், அவை ஏற்கனவே பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பழைய சிலிண்டர்களைப் போன்று தோற்றமளிக்கச் செய்வதற்காக சந்தேகநபர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















