கனடாவில் காலமான புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர். சேரனின் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 19 வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பாராளுமன்றம் மற்றும் முழு நாட்டின் சார்பிலும் தனது இரங்கலைப் பதிவு செய்தார்.
நாட்டில் நல்லிணக்கம் இல்லாத சூழல் காரணமாக, 1987-ஆம் ஆண்டு கவிஞர் சேரன் இலங்கையை விட்டு வெளியேற நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
1970 அல்லது 1980-களில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால், அவர் இன்றும் எமது நாட்டிலேயே இருந்திருப்பார் எனத் தெரிவித்த அமைச்சர், நாடு ஒரு சிறந்த படைப்பாளியை இழந்துவிட்டதாகக் கவலை வெளியிட்டார்.
விருதுகள் பல பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியரான சேரன், ‘மஹாகவி’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற கவிஞர் டி. ருத்ரமூர்த்தியின் புதல்வர் என்பதையும் அமைச்சர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட சேரன், கவிஞராகவும் ஊடகவியலாளராகவும் கல்வியாளராகவும் அறியப்பட்டவர். இரண்டாவது சூரிய உதயம், யமன் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
இலங்கையில் சரிநிகர் பத்திரிகையின் உருவாக்கத்திலும் ஆசிரியர் பணிகளிலும் பங்களித்த அவர், பின்னர் கனடாவில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றினார்.













