லிபியத் துறைமுகம் ஒன்றில், ஏழு கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் ‘மெர்குரி’ (Merkury) எனும் போர்க்கப்பலை உக்ரேன் மூழ்கடித்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி திங்களன்று (23) தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (22) லிபியா அருகே தாக்கப்பட்ட மற்றொரு இலக்கு, ரஷ்யாவின் ‘எம்வி அங்காரா’ (MV Angara) எனும் சரக்குக் கப்பல் என்றும், ரஷ்யா இந்தக் கப்பலைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தி வந்ததாகவும் செலன்ஸ்கி கூறினார்.
போர்க்கப்பலுடன் ஒரு ரஷ்ய Ka-27 போர் ஹெலிகொப்டரும் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பின்லாந்து வளைகுடாவில் ரஷ்ய இராணுவத்துடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று பெங்காசி கடற்படைத் தளத்தில் மெர்குரி கப்பல் நிறுத்தப்பட்டிருந்தபோது, அது ஆளில்லா விமானத் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் ஒன்றால் தாக்கப்பட்டதாக லிபியாவின் கிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்ட அரசாங்கம் கூறியது.
ஒரு உள்நாட்டுப் போருக்குப் பிறகு, மேற்கு லிபியா, திரிபோலியைத் தளமாகக் கொண்ட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதே நேரத்தில் கிழக்குப் பகுதி, ரஷ்யாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள லிபிய தேசிய இராணுவத்தின் தளபதி கலீஃபா ஹஃப்தாரின் கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














