இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததுடன், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் மீளச் செயற்படுத்துவதற்கான நாடுகடந்த சதித்திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மினுக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இது தொடர்பான தகவலை இந்தியாவின் பிரஸ் டிரஸ்ட் ஒஃப் இந்தியா (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி. ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சிறப்பு நீதிமன்றம் முஹம்மது அஸ்மினுக்கு ஏற்கனவே மன்னிப்பு வழங்கியிருந்ததுடன், அரசுத் தரப்பு சாட்சியாக இருந்து விசாரணைக்கு ஒத்துழைக்கவும் அவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரைத் தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவருக்குப் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், கேரள சாட்சி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, அவரைச் சாட்சி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசின் உள்துறைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஒரு இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பிணைப்பத்திரத்தையும், அதே தொகைக்கு இரண்டு தகுதியான பிணைதாரர்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், முழுமையான குடியிருப்பு முகவரி மற்றும் தற்போதைய கைபேசி இலக்கத்தை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, முஹம்மது அஸ்மின் எர்ணாகுளம் மாவட்ட எல்லைக்குள் மாத்திரமே தங்கியிருக்க வேண்டும் எனவும், சிறப்பு நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை அதிகாரி அழைக்கும் சந்தர்ப்பங்களில் விசாரணைக்காகவும், வழக்குடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அவர் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

















