நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடுகோரி தாக்கல் செய்துள்ள வழக்குவிசாரணையில் தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது நீதிமன்றில் முன்னிலையாகி அநுரகுமார திசாநாயக்க சாட்சியம் வழங்கியிருந்தார்.
தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 2017ஆம் ஆண்டு தங்காலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்களினால் தமக்கு அவமதிப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை வழக்கு விசாரணையில் முன்னிலையானதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்க நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது ”ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக இடம்பெறும். தேர்தல் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது. இருவரும் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிப்பதற்கே முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற கலைக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
10 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில்விக்ரமசிங்கவிடம் வழங்க வேண்டும் என வஜிர அபேவர்தன கூறுகின்றார். அதேபோல் தேர்தலை 2 வருடங்களுக்கு தேர்தலை பிற்போடுமாறு பாலித ரங்கே பண்டார கூறுகின்றார். தேர்தல் தொடர்பாக அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. என்பது இதனூடாக தெளிவாகின்றது” எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.